சல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக ராச்சஸ்டரில் கூடிய தமிழ் உள்ளங்கள், இது போன்ற போராட்ட ஆதரவுகளை எடுத்துச் செல்லவும், தாய்த் தமிழகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவி என்று வரும்போது ஊர்கூடித் தேர் இழுக்கவும், சட்டப் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்காக ஒரு அமைப்புத் தேவை என்று விரும்பினர். அதன் தொடர்ச்சியாக "The Tamils of Greater Rochester" என்ற பெயரில் ஒரு லாப நோக்கில்லாத தொண்டு அமைப்பு ஒன்றை நிறுவ அடிப்படை பணிகளைத் துவக்கினோம். அந்த செய்தியையும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் கலந்து பேசவும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மீத்தேன் எடுப்பதை எதிர்க்கும் போராட்டத்துக்கு எமது தார்மீக ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணமும் கூட்டம் ஒன்றை 25 ஃபிப்ரவரி 2017 அன்று வெப்ஸ்டர் பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பாடு செய்தோம்.
பின்னர் இந்தியாவில் இருந்து தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஸ்கைப் மூலம் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகள் பற்றியும், நெடுவாசல் போராட்டம் பற்றியும், நடுவண் அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு செய்து வரும் துரோகங்கள் பற்றியும், அந்த துரோகங்களை எதிர்த்து அவரது அமைப்பு நடத்தி வரும் தொடர்ந்த போராட்டங்கள் பற்றியும் உரையாற்றினார்.
தொடர்ந்து நெடுவாசலில் போராடி வரும் விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆதரவு தெரிவுக்கும்வண்ணம் பதாகைகள் ஏந்தி கோசங்கள் போட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி கலைந்தோம்.
தொடர்ந்து இது போன்ற கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று பெரும்பான்மையோர் கருத்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment