The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Wednesday, August 23, 2023

ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு செயற்குழு கூட்டம் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இன்று ஆகஸ்ட் மாதம் 21ம் நாள் திங்கட்கிழமை TGROCயின் மாதாந்திர செயற்குழு கூட்டம் மெய்நிகர் கூட்டமாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட இரண்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 


தீ்ர்மானம் 1:

கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்தை அடக்குவதற்கு முயற்சிகள் பெரிதாய் செய்யாமல் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவது போல நடந்து கொள்ளும் மணிப்பூர் மாநில அரசை ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு வன்முறைச் செயல்களைக் கட்டுப்படுத்தி மணிப்பூரில் அமைதி திரும்ப ஆவன செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 


தீர்மானம் 2:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் சின்னதுரை. வள்ளியூர் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வகுப்புத் தோழர்கள் சிலரால் சின்னதுரை சாதி ரீதியிலான கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். 

உடன் படிக்கும் ஆதிக்கச் சாதி மாணவர்களின் புத்தகங்களைச் சுமக்கச்செய்வது, பள்ளிக்கு வரும் வழியில் அவரிடம் ஏவல் பணிகளைச் செய்யச் சொல்வது, வீட்டுப்பாடங்களை எழுதச் சொல்வது என அவரை அவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர். அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதையும் வாடிக்கையாகச் செய்து வந்துள்ளனர்.

இதனால் பள்ளிக்குச் செல்வதையும் தவிர்த்திருக்கிறார். ஆசிரியர்கள், சின்னதுரையிடம் விசாரித்ததில், நடந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்துக் கண்டித்திருக்கிறார்கள். 

இதனால் ஆத்திரமடைந்த மாணவக்குழு ஒன்று சின்னதுரையின் வீட்டுக்குள் இரவு 10:30 மணியளவில் புகுந்து, சின்னதுரையையும், அவரின் தங்கை சந்திரா தேவியையும் சரமாரியாக வெட்டியிருக்கிறது. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள், சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது, இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.

செயற்கை நுண்ணறிவை அறிந்துகொள்ளவும், அறிவியலின் அடுத்தகட்டத்திற்கும்  முன்னேறிக்கொண்டிருக்கும் இப்பூவுலகில் எம்பள்ளி மாணவர்களைச் சாதியம் சாய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு சங்கம் கவலை கொள்கிறது. 

கல்விசார்ந்த செயல்பாடுகளை, முன்னெடுப்புகளை முதன்மைப்படுத்தியே சேவை நேரத்தையும், உழைப்பையும் கொடுக்கும் நம் சங்கம் இன்னும் அதைத்தீவிரப்படுத்துவதை உறுதிப்படுத்த முனையும் என்று தெரிவித்துக்கொள்கிறது.

சாதிவெறி பிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகத் தெரிகிறது. சாதிப்பெருமை, மதப்பெருமை என்னும் பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்பு அரசியல் இளம் சமூகத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய மனிதத்துக்கு எதிரான இழிவான போக்கை ராச்சஸ்டர் வட்டாரத்தமிழர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny