இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் இருளர்களின் வாழ்வுமுறையும், அரசாங்கமும் அதிகார வர்க்கமும் அவர்களிடம் நடத்தும் சுரண்டலும் நூறில் ஒரு பங்குதான். காட்டப்படாதது எத்தனையோ.
சங்க காலத்தில் வாள் தூக்கிப் போர் புரிந்து எதிரிகளை அஞ்சி நடுங்க வைத்த போர் வீரர்களாக இருந்த இருளர் இனம் இன்று வயலில் எலி பிடிப்பவர்களாகவும், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகவும் சுருங்கிப்போனது நாம் அவர்கள் மீது நிகழ்த்திய உச்சகட்ட வன்முறை.
பழங்குடி வகுப்பாக பட்டியிலிடப்பட்டிருந்தாலும் அந்த சான்றிதழைப் பெற்று அதற்கான சலுகையைப் பெறுவதென்பது கல்லில் நார் உரிப்பதைக்காட்டிலும் கடினமான செயல். இது போதாதென்று காவல்துறையால் மாதாந்திர வருடாந்திர கோட்டாவை முடிக்க செய்யாத குற்றங்களுக்கு சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவதும் இவர்களே.
இப்படி அல்லலுக்குள்ளாகும் இருளர் வாழ்வில் ஓரளவிற்கு ஒளியேற்ற துவங்கப்பட்டதுதான் இருளர் பாதுகாப்பு சங்கம். இதனை 1996ம் ஆண்டு தோற்றுவித்த பேராசியர் கல்யாணி அவர்களால் இருளர் இன குழந்தைகளுக்கான இலவசக் கல்விக்காக துவக்கப்பபட்டது திண்டிவனத்தில் உள்ள தாய்த் தமிழ்ப் பள்ளி.
குடும்பத்தோடு செங்கல் சூளைகளிலும் வயல்களிலும் காலம்காலமாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வரும் குடும்பங்களை அரசு உதவியுடன் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் அளிக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளியோடு நம் TGROCயும் 2017ம் ஆண்டு முதல் இணைந்து செயலாற்றி வரும் திட்டம்தான் “வேருக்கு நீர்”
இந்தத் திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆளுக்கு இரண்டு மரக்கன்றுகள் கொடுத்து அவர்களின் வீட்டுக்கருகில் நட்டு வளர்க்கச் செய்கிறோம். அப்படி வளர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.300ஐ அஞ்சல் அலுவலக கணக்கில் போட்டு வருகிறோம். கல்வியாண்டின் இறுதியில் அந்தத் தொகையை மாணவர்கள் தங்கள் கல்விச்செலவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இதன்மூலம், மரம் வளர்ப்பதன் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை மாணவர்கள் மனதில் பதிப்பதோடு சேமிப்பின் அத்தியாவசியத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த மாணவர்கள் துவக்கிய அஞ்சல் நிலையக் கணக்குதான் பெரும்பாலான குடும்பங்களுக்கு முதல் சேமிப்புக் கணக்கு. அந்த குடும்பங்களும் இந்த சேமிப்பு கணக்கில் சேமிப்பதாகக் கேள்விப்படுகிறோம்.
நம் சங்க உறுப்பினர்கள் பலர் இந்த வேருக்கு நீர் திட்டத்தில் அரவணைப்பாளர்களாக (sponsor) இருக்கிறார்கள். ஒரு மாணவருக்கு மாதம் $5 வீதம் ஒரு ஆண்டுக்கு $60 டாலர்கள் இதற்கு அளிக்க வேண்டும். 1 மாணவர் முதல் 5 மாணவர் வரை அரவணைக்கும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
நாம் ஏற்றுவது ஒரு சிறிய தீபம்தான். ஆனால் அந்த தீபம் வெளிச்சத்தைக் கொடுப்பது ஒரு குடும்பத்துக்கே.
ஜெய் பீம் என்றால் ஒளி
ஜெய் பீம் என்றால் அன்பு
ஜெய் பீம் என்றால் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்
ஜெய் பீம் என்றால் பலகோடி மக்களின் கண்ணீர்த் துளி!!
ஜெய் பீம்.
No comments:
Post a Comment