ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் பொங்கல் திருவிழா, கடந்த 19 ஜனவரி, தை 5 ஆம் நாள், இந்திய சமூக நடுவத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆத்திசூடி அருந்தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மேடையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர். அடுப்படியில் மஞ்சள் குங்குமத்துடன் மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட மண் பானையில் பொங்கல் பொங்கி வர, அதனைச் சூழ்ந்த குழந்தைகள் பொங்கலோ பொங்கல் எனக் கூச்சலிட்டு ஒவ்வொருவரும், கைப்பிடி பச்சரிசையைப் பானையில் இட்டுச் சென்ற அழகினை, வெளியே இருந்த அனைவரும், நேரலையில் கண்டுகளித்தனர். இந்த அனுபவத்தினைக் கொடுத்த பெருமிதத்துடன், கலை நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.
அமைப்பின் தலைவர் பாரதி வரவேற்றுப்பேச, மின்னொலிப் பெருக்கி, விழா நெறி காப்பாளர்கள், அமைப்பின் செயளாலர் பிரமோத் மற்றும் செல்வி ரோமிகாவின் வசமானது. நிகழ்ச்சியின் இடையிடையே இருவரும் பகிர்ந்த பொங்கல் பற்றியக் குறுந்தகவல்கள், துணுக்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சிறுவர் சிறுமியரிடையே நடந்த புதிர் விளையாட்டுப் போட்டி, பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு கவனிக்க வைத்தது. ஜினியா, ஸ்ரீப்ரியா மற்றும் புவனா நல்ல முறையில் போட்டியை ஒருங்கிணைந்தனர். வெற்றி பெற்ற அணிக்குப் பரிசுகள் அளித்ததுடன், ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
ஆத்திசூடி தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நாடகம் கரு, காட்சியமைப்பு, பின்னணி இசை, நடிப்பு, பரிமாறப்பட்ட விதம், சொல்ல வந்த கருத்து என ஒட்டுமொத்தமாக அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இயக்குனர் தினேஷ் மற்றும் நடித்த மாணவர்களைப் பார்வையாளர்கள் கைத்தட்டி பாராட்டு மழையில் நனைய வைத்தனர்.
பொருளாளர் தினேஷ், அமைப்பின் நோக்கங்களைப் புதியவர்களுக்கு எடுத்துரைத்து, வரவு செலவு கணக்குகளைச் சுருக்கமாக முன்வைத்து, அமைப்பின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைப் பட்டியலிட்டு, அதற்கான செலவுகளையும், செலவுக்கான ஆதாரங்களையும் (Source), இருப்பு நிலை குறிப்புகளாக எளிய முறையில் விளக்கினார்.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நண்பர் மோஷி மற்றும் தம்பி பாகீசன் பதிவு செய்து உதவினர். மேடை பொங்கல் விழாவினை மையமாக வைத்து திவ்யா, ரோமிகா மற்றும் பிரணவ் ஆகியோரால் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. மேடைக்குக் கீழே ஆஷா வடிவமைத்த பொங்கல் குடில், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பொங்கல் ஓவியங்கள் விழாவினை மேலும் அழகாக்கியது.
ஒளி ஒலியில் மூழ்கடித்த ஆண்டர்சன் மற்றும் சாய் தம்பணியைச் சிறப்பாகச் செய்துகொடுத்தனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வந்திருந்த அனைவருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. முதல் முறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களும் ஆர்வமுடன் உணவு பரிமாறும் பணியை மேற்கொண்டது அவர்களின் ஈடுபாட்டினை எடுத்துரைத்தது. இதன் இடையே மேடையில் மணி, அடுத்தப் பந்திக்குக் காத்திருந்தவர்களை மேடையேற்றி தமிழ் புதிர் கேள்விகளால் நகைச்சுவை பொங்கல் படைத்துக்கொண்டிருந்தார்.
குறித்த நேரத்தில் நடந்த நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர்களான ஜினியா, பிரின்ஸ், ஆஷா, பிராங்க்ளின், அபிராமி, கண்ணன் ஆகியோரின் நிகழ்ச்சி தயாரிப்பின் நேர்த்தியைக் காட்டுவதாக அமைந்தது.
இறுதியாக வந்திருந்தவர்கள் மற்றும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் அமைப்பின் செயலாளர் பிரமோத் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment