ராச்சஸ்டர் வட்டாரத்தில் வசித்து வரும் இந்தியா மற்றும் ஈழத்தைத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வளர்க்கும் வண்ணம் உருவாக்கியுள்ள ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு என்ற நமது அமைப்பின் துவக்கவிழாவும், தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையும் ஒருங்கே ஏப்பிரல் 22, 2017 அன்று ராச்சஸ்டரில் உள்ள இந்திய சமூகக் கூடத்தில் பெரும் அளவில் நடத்தினோம்.
விழாவிற்கு டெம்பிள் ஆஃப் சேரிஸ் (Temple of Sarees), Lyca Mobile, Saratoga Pharmacy, (and other sponsors go here) நிதி வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்.
விழாவில் லைகா, சரடோகா, டெம்பிள் ஆஃப் சேரிஸ் ஆகியோர் கடைகள் அமைத்தனர்.
சுமார் 300 பேர் கலந்து கொண்ட இந்த விழாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நடனம், பாடல், நாடகம் போன்ற பலவகைக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர்கள் மட்டுமல்லாது பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என பலரும் கலந்து கொண்டு ஒரு முழுமையான திராவிடத் திருவிழாவாக அமைந்தது.
நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான திரு. மணிகண்டன் ராமசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார். அமைப்பு உருவான வரலாறு என ஒரு சிறு காணொளியும் அதைத் தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தாரோடு அறிமுகப்படுத்திக்கொண்ட காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டன.
செல்வி. ரோமிகா சாய்ராம் மற்றும் ஸ்வேதா சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள். இடையிடையே "Say no to Plastic" என்ற தலைப்பில் அவர்கள் வழங்கிய குறிப்புகளும், ஆலோசனைகளும் தெரியாத ஆனால் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்களை அளித்தன.
கலைநிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட குழந்தைகளுக்கு மேடையிலேயே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
புதிய நிர்வாகக் குழு
உணவு இடைவேளைக்கு முன்பாக தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய ரமேஷ் கிருஷ்ணசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விவரம் வருமாறு.
1. திரு. பாரதிராஜன் தாமோதரன் - தலைவர்
2. திரு. பிரமோத் சின்னத்தம்பு - செயலாளர்
3. திரு. தினேஷ் குமாரராமன் - பொருளாளர்
4. திரு. சாய்ராம் கோவிந்தராஜுலு - இயக்குநர்
5. திருமதி. அருணா மணிகண்டன் - இயக்குநர்
6. திரு. நாதசொரூபன் - இயக்குநர்
7. திரு. ராஜசெல்வம் முத்துவேல் - இயக்குநர்
8. திருமதி. அபி கண்ணன் - இயக்குநர்
9. திருமதி. பிரேமா ராமகிருஷ்ணன் - இயக்குநர்
10. திருமதி. காமினி ஜெகதீஷ் - இயக்குநர்
11. திரு. தமிழ்வேந்தன் தேவேந்திரன் - ராச்சஸ்டர் ஒருங்கிணைப்பாளர்
12. திரு. ராஜேஷ் குமார் சக்ரபாணி - சிரக்யூஸ் ஒருங்கிணைப்பாளர்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் நன்றி கூறி சிறு உரையாற்றினர்.
சைவ அசைவ உணவு வகைகள் அனைத்தும் சூடு குறையாமல் பஃபே முறையாக இல்லாமல் கைகளால் பறிமாறப்பட்டது உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டன.
விழாவில் நிதி திரட்டும் முகம் கைகளில் மருதோன்றி இடுவது, வீட்டு வைத்திய இருமல் மருந்து விற்பனை, புத்தகங்கள் விற்பனை ஆகியவையும் நடைபெற்றன. அதோடு பரிசுக் குலுக்கல் முறையில் டெம்பிள் ஆஃப் சேரிஸ் வழங்கிய பட்டு சேலைகள் இரண்டும், நகை ஒன்றும், லைகா நிறுவனம் வழங்கிய பத்து சிம் கார்டுகளும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.
உணவு இடைவேளையைத் தொடர்ந்து வேருக்கு நீர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தி பாரதிராஜன் அவர்கள் உரையாற்றினார்.
கலை, பண்பாடு, இலக்கியத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், தாய்நாட்டில் வசித்துவரும் உறவுகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், "வேருக்கு நீர்" என்ற இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திண்டிவனத்தில் நடந்து வரும் தாய் தமிழ்ப் பள்ளியோடு இணைந்து செயல்படும். இதன் மூலம் அந்தப் பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக் கன்று தரப்படும். அந்த மரக்கன்றை அவர்கள் நட்டு பேணிப் பாதுகாத்து வளர்த்து வர வேண்டும். இப்படி சரியாகப் பராமரிக்கப்படும் மரங்களைப் பராமரிக்கும் மாணவருக்கு அஞ்சல் நிலையத்தில் கணக்கு துவக்கப்பட்டு மாதா மாதம் 300 ரூபாய் செலுத்தப்படும். ஆண்டு இறுதியில் அந்த மாணவர்கள் அந்தப் பணத்தை கல்விச் செலவுக்குப் பயன்படுத்தியது போக மீதமிருக்கும் தொகை பள்ளியின் வளர்ச்சிக்கு (கழிப்பறை கட்டுதல், வகுப்பறைகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு) உபயோகப்படும். இந்த முன்னெடுப்பின் மூலம் அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழல் அறிவைப் புகட்டுவதோடு, சேமிப்பின் அவசியமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. கல்வியே வறுமைக் கோட்டை அழிப்பதில் முதலிடம் வகிக்கிறது என்பதால் கல்விக் கண் திறப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மனதில் கொண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அமைப்பின் உறுப்பினர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இறுதியாக திரு. பிரமோத் அவர்கள் திருக்குறளைப் பற்றி சிறு உரையாற்றினார். திரு. தினேஷ் அவர்கள் அமைப்பாளர்களான மணி-அருணா, வெங்கட்-சாரிகா மற்றும் ராஜ்-மஞ்சுளா ஆகியோருக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கொடுத்து நன்றியுரை ஆற்றினார். விழாவின் ஆணிவேராக இருந்த அத்துணை பேருக்கும் பெரும் கரகோஷத்துடன் நன்றி தெரிவித்து, கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் இருக்கும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் விழா இனிதே முடிவுற்றது.
வெற்றிகரமாக நடந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்றும், உணவு திருப்திகரமாக இருந்தது என்றும், உணவை அமைப்பாளர்கள் தங்கள் கைகளால் பரிமாறியது ஒரு குடும்ப விழாவில் பங்குகொண்ட திருப்தியைக் கொடுத்தது எனவும் தெரிவித்தனர். தமிழ் அமைப்பின் அடுத்தடுத்த விழாக்களிலும் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்போம் என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment